வால்பாறை சிங்கோனா டேன்டீ நிர்வாகம் மூடப்படாது
வால்பாறை சிங்கோனா டேன்டீ நிர்வாகம் மூடப்படாது என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
வால்பாறை சிங்கோனா டேன்டீ பகுதியில் தேயிலை தொழிற்சாலை, தேயிலை தோட்டம், டேன்டீ ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அதிகாரிகளுடன் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது டேன்டீ அதிகாரிகள், டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரி மற்றும் வால்பாறை பகுதியில் இயங்கி வரும் டேன்டீ நிர்வாகம் தற்போது பல்வேறு சிக்கல்களால் நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்து மீண்டும் புதுப் பொலிவுடன் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சம்பளத்தை பெற்றுக் கொடுக்கப்படும். தொழிலாளர்களின் குடியிருப்புகளை பராமரிப்பு செய்து, டேன்டீ ஆஸ்பத்திரியில் தேவையான மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும். தேயிலை தொழிற்சாலைகளை புதுப்பித்து, வால்பாறை மற்றும் நீலகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும், வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் டேன்டீ நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் தேயிலை தூள் விற்பனை மையங்கள் உருவாக்கி விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் டேன்டீ நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கியதற்கான காரணத்தை தனியார் அமைப்பின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் டேன்டீ நிர்வாகம் மூடப்படவோ, வனத் துறையிடம் ஒப்படைக்கவோ தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது. அதற்கு மாறாக டேன்டீ நிர்வாகம் மீண்டும் புதுப் பொலிவுடன் லாபம் ஈட்டும் வகையில் மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது டேன்டீ நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் பார்க்வேதேஜா, உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள், தி.மு.க நகரகழக செயலாளர் சுதாகர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி மற்றும் வனத் துறையினர் உடனிருந்தனர்.