வால்பாறையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
வால்பாறையில் நேற்று கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரித்தனர். இறந்த முன்னோர்களுக்காக மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
வால்பாறை
வால்பாறையில் நேற்று கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரித்தனர். இறந்த முன்னோர்களுக்காக மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
கல்லறை திருநாள்
நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி இறந்த முன்னோர்களை நினைவு கூரும் வகையில், கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை தினத்தை அனுசரித்தனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் காலை முதலே தங்கள் முன்னோர்களின் கல்லறைக்கு சென்று சுத்தம் செய்து, கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
வால்பாறை தூய இருதய ஆலய கல்லறை தோட்டத்தில் ஆலய பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் ஆகியோர் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.
சிறப்பு பிரார்த்தனை
முடீஸ் புனித அந்தோணியார் ஆலய கல்லறை தோட்டத்தில் பங்கு குரு மரிய அந்தோணிசாமி திருப்பலி நிறைவேற்றி கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய கல்லறை தோட்டத்தில் பங்கு குரு ஆனந்தகுமார் திருப்பலி நிறைவேற்றினார். இதேபோல சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலய கல்லறை தோட்டத்தில் பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜூம், புனித லூக்கா ஆலயத்தில் பங்கு குரு ஜிஜோதோமசும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர்.
ஜெபமாலை வழிபாடு
இதனை தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கல்லறையில் மாலை 5.00 மணிக்கு ஜெபமாலை ஜெப வழிபாடும், அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடத்தப்படுகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆர்.சி. கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்பட்டது. ஆலய பங்குத்தந்தை ஜேக்கப் தலைமையில் இறந்த முன்னோர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.