மாடு திருடிய வேன் டிரைவர் கைது
ஆம்பூர் அருகே மாடு திருடிய வேன் டிரைவர் கைது
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (55). இவர்கள் இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன.
இவர்களுக்கு சொந்தமான 2 மாடுகள் கடந்த ஜூன் மாதம் திருட்டு போனது. இது குறித்து இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாடு திருடிய நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தவழியாக வந்த ஒரு வேனை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் வேகமாக சென்றது.
இதையடுத்து போலீசார் விரட்டி சென்று வேனை நிறுத்தி தப்ப முயன்ற டிரைவரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆம்பூரை அடுத்த குமார்மங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 46) என்பதும், தேவலாபுரத்தில் மாடுகளை திருடிச் சென்று திண்டுக்கல் அருகே விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.