சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து


சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
x

ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சேலம்

புதுச்சேரியில் இருந்து கல்லூரி மாணவர்கள் 13 பேர் ஒரு வேனில் ஏற்காட்டிற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். இதையடுத்து நேற்று மாலை அனைவரும் வேனில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது ஏற்காட்டில் இருந்து மலைப்பாதையில் சேலம் நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. புதுச்சேரியை சேர்ந்த தரணி என்பவர் வேனை ஓட்டினார். அப்போது 60 அடி பாலத்தை வேன் கடந்து வந்தபோது ஒரு வளைவில் உள்ள பாறையின் மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த கல்லூரி மாணவர்கள் ரமணி, கண்ணன், ராஜா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். மீதமுள்ளவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது மலைப்பாதையில் வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story