மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக ஆலந்தூர்-போரூர் இடையே வேன் சேவை - ரூ.40 கட்டணத்தில் பயணிக்கலாம்


மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக ஆலந்தூர்-போரூர் இடையே வேன் சேவை - ரூ.40 கட்டணத்தில் பயணிக்கலாம்
x

ஆலந்தூர்-போரூர் இடையே வேன் சேவையை மெட்ரோ ரெயில் நிறுவன பயணிகளுக்காக தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தல் இருந்து போரூரில் உள்ள டி.எல்.எப். சைபர் சிட்டியில் பணியாற்றுபவர்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தனியார் வாகன இணைப்பு சேவையை, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் போரூரில் மரக்கன்றுகளை நட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பயணிகள் நலன் கருதி பல்வேறு இணைப்பு சேவைகளை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, போரூரில் இருந்து ஆலந்தூர் வரை பாஸ்ட் டிராக் நிறுவனத்துடன் இணைந்து தனியார் வாகன இணைப்பு சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

ஏ.சி.வசதி கொண்ட 12 இருக்கைகள் கொண்ட 4 வேன்கள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலந்தூரில் இருந்து போரூர் வரை இயக்கப்படுகிறது. ஒரு நபருக்கான கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கியூ.ஆர்.குறியீடு மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே வாகனத்தில் ஏறும் போது பயணிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிரந்தர பொதுப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 128 மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் 119 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டம் வருகிற 2026-ம் ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பணிகள் நடந்து வருகிறது. பணி நிறைவடைந்த உடன் சென்னையில் உள்ள அனைத்து இடங்களும் மெட்ரோவில் இணைக்கப்படும். 'மெட்ரோ கனெக்ட்' என்ற திட்டத்தின் கீழ் பெரிய அலுவலக வளாகங்களில், கல்லூரி, வணிக வளாகங்கள் போன்ற இடங்களிலும் இணைப்பு சேவையை வழங்க விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, டி.எல்.எப். நிறுவன செயல் இயக்குனர் அமித் குரோவர், பாஸ்ட் டிராக் நிறுவன இயக்குனர் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் கோகுல்நாதன் நன்றி கூறினார்.


Next Story