வனதுர்க்கை அம்மன் கோவில் குடமுழுக்கு
வேதாரண்யம் அருகே வனதுர்க்கை அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வனதுர்க்கை அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
வனதுர்க்கை அம்மன்
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த வனதுர்க்கை அம்மன் கோவில். இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்ட மிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்தது.
பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 22-ந்தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. அதை தொடர்ந்து நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார் வெங்கடேச குருக்கள் தலைமையில் கடங்கள் புறப்பாடாகி மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலின் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
குடமுழுக்கு
குடமுழுக்கு விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்து நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், வீரராசு கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம் மற்றும் இந்து நற்பணி மன்றத்தினர், தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.