புதிய தாலுகாவாக வாணாபுரம் உதயம்


புதிய தாலுகாவாக வாணாபுரம் உதயம்
x
தினத்தந்தி 18 July 2023 6:45 PM GMT (Updated: 18 July 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தாலுகாவாக வாணாபுரம் உதயமாவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகத்தின் பணிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 தாலுகாக்கள் உள்ளன. இந்த நிலையில் சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய தாலுகாக்களை சீரமைத்து வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டு, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடர் 2022-23-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.

அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சீரமைத்து புதிதாக வாணாபுரம் தாலுகா ரூ. 7.56 கோடி செலவில் உருவாக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

வருவாய்த்துறை சார்ந்த சேவைகள்

அவரது அறிவிப்பின்படி, சங்கராபுரம், திருக்கோவிலூர் தாலுகாக்களை சீரமைத்து வாணாபுரம் புதிய தாலுகா உருவாக்குவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.

இதில், தற்போது சங்கராபுரம் தாலுகாவில் உள்ள சிறுபனையூர், கள்ளிப்பாடி, லா.கூடலூர், அலியாபாத், பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி மற்றும் பல கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகள், பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு 40 கி.மீ. தூரத்தில் உள்ள சங்கராபுரம் தாலுகாவுக்கு வந்து செல்ல சிரமப்பட்டனர். இதனால் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை பெற மேற்கூறிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரு நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியதாக உள்ளது.

மேலும், புதிய தாலுகாவாக உருவாக்கப்படும் வாணாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்கள் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, இயற்கை வளம், போக்குவரத்து வசதி போன்றவற்றால் மிகவும் பின்தங்கி உள்ளது.

ஆகையால், வெகுதொலைவில் உள்ள கிராமங்களை பிரிப்பதன் மூலம் அந்த மக்களுக்கு கால விரயம் மற்றும் பணவிரயத்தையும் குறைக்கவும், அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக பொதுமக்களுக்கு விரைந்து கிடைத்திடவும், வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து வாணாபுரம் தாலுகா உருக்கிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

85 வருவாய் கிராமங்கள்

மேலும், தற்போது சங்கராபுரம் தாலுகாவில் உள்ள ரிஷிவந்தியம், அரியலூர், வடபொன்பரப்பி ஆகிய குறுவட்டங்கள், திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள மணலூர்பேட்டை குறுவட்டத்தில் 11 வருவாய் கிராமங்களை மட்டும் சேர்த்து வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய 4 குறுவட்டங்களுடன் 85 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

மாவட்ட கலெக்டரின் கருத்துகளை ஆய்வு செய்து, கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் கீழ்காணும் ஆணையை பிறப்பித்துள்ளனர். அதன்படி, சங்கராபுரம், திருக்கோவிலூர் தாலுகாக்களை சீரமைத்து 4 குறுவட்டங்களுடன் 85 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரம் புதிய தாலுகாவாக உருவாக்கப்படுகிறது.

இதில் தொகுப்பு கிராமங்களை பிரித்து புதிதாக தொகுப்பு கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

அலுவலகத்துக்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்படுள்ளது.

மேலும் அரசாணையில், தாலுகாவில் உள்ள பணியிடங்கள், செலவினங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று திறப்பு விழா

இந்நிலையில், வாணாபுரம் புதிய தாலுகா அலுவலகம் பகண்டை கூட்டுரோட்டில் ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்க உள்ளது. இந்த அலுவலகத்தை இன்று(புதன்கிழமை) கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்க இருக்கிறார்.


Next Story