விளைநிலங்களில் இழந்த மண் வளத்தை மீட்டெடுக்க உதவும் வண்டல்


விளைநிலங்களில் இழந்த மண் வளத்தை மீட்டெடுக்க உதவும் வண்டல்
x
திருப்பூர்


மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் விளைநிலங்களில் இழந்த மண்வளத்தை மீட்டெடுக்க வண்டல் மண் உதவி புரிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மண் மலட்டுத்தன்மை

அதிக மகசூலைக் கருத்தில் கொண்டு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு தொடர்ச்சியாக ரசாயனங்கள் பயன்படுத்தும் போது மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு மண் மலட்டுத்தன்மையுடையதாக மாறுகிறது.

இதனால் நாளுக்கு நாள் மகசூல் குறைந்து கொண்டே வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது. இந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விளைநிலங்களில் நிரப்புவதால் மண்வளம் மீட்டெடுக்கப்படுவதுடன் அதிக மகசூல் ஈட்டும் வாய்ப்பு உருவாகிறது.

குடிமராமத்து

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நீர்நிலைகளின் அவசியத்தை அனைத்து தரப்பினரும் உணர்ந்திருந்த காலத்தில் அவை முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன.இயல்பாகவே நீர்நிலைகளுக்கு நீர் வரத்து ஏற்படும்போது மண், மரம் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டு நீர்தேக்கப்பரப்பில் தேங்குவது இயல்பாக நடக்கும் விஷயமாகும். இதனைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் விவசாயிகள் இணைந்து நீர்நிலைகளில் குடிமராமத்து செய்து நீர்நிலைகளை தூர் வாருவார்கள். அப்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விளைநிலங்களில் கொட்டி வளப்படுத்துவார்கள்.நீர்நிலைகள் அரசின் பராமரிப்பில் சென்ற பின் காலப்போக்கில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ள இந்த திட்டத்தின் படி குறிப்பிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டரும் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல விவசாயிகள் வண்டல் மண் மூலம் நிலத்தை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் அருகிலுள்ள குளம், குட்டைகளில் உரிய நேரத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story