வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி


வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 29 Sep 2023 9:58 AM GMT (Updated: 29 Sep 2023 10:04 AM GMT)

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடுவதால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால் படப்பை- வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஆறு போல் ஓடியதால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நேற்று காலை கடும் அவதிக்குள்ளானார்கள். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் விழுந்து உயிருக்கு பயந்து சென்றனர். இதனால் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்:-

இந்த மழைக்கே சாலையில் ஆறு போல் வெள்ளம் ஒடுகிறது. இதனுடன் கழிவு நீரும் கலந்து ஓடுகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் என்ன ஆகுமோ? மழைநீர் தேங்கி சாலையில் நிற்காமல் ஓடுவதை தடுக்க நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story