அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் வந்தவாசி புதிய பஸ் நிலையம்


அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் வந்தவாசி புதிய பஸ் நிலையம்
x

வந்தவாசி புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

புதிய பஸ் நிலையம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நகராட்சி அலுவலகம் எதிரில் பழைய பஸ் நிலையம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் வந்தவாசி காமராஜர் நகர் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.5 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

இந்த பஸ் நிலையம் மு.கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டது.

தற்பொழுதும் அவர் பெயரிலேயே இயங்கி வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள், ஆண்-பெண் தனித்தனி ஓய்வறைகள், கட்டண கழிவறைகள் கட்டப்பட்டன. இந்த பஸ் நிலையம் திறந்தநாள் முதலே சரிவர இயங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பூட்டப்பட்ட கழிவறைகள்

பஸ் நிலையம் தொடங்கிய நாள் முதல் ஆண், பெண் ஓய்வறைகள் திறக்கப்படவில்லை. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறக்கப்படவில்லை. எப்போதும் பூட்டப்பட்டே உள்ளன.

மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக ஆண், பெண் கழிவறைகள் பூட்டப்பட்டே உள்ளன. இதனால் பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு பஸ் நிலையம் அருகே உள்ள முட்புதர்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலும் ஆண்கள் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதால் பஸ் நிலையத்தினுள் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இந்த பஸ் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் இருந்தும் அதில் குடிநீர் வருவதில்லை.

இதனால் ஏழை பயணிகள் குடிநீருக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் அமர இருக்கை வசதியும் செய்யப்படவில்லை. இரவில் இந்த பஸ் நிலையத்துக்கு விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. சில தனியார் பஸ்களும், தொலைதூர அரசு பஸ்களும் புதிய பஸ் நிலையத்துக்கு வருவது இல்லை.

பயணிகள் அவதி

இதனால் பயணிகள் புதிய பஸ் நிலையத்துக்கும் பழைய பஸ் நிலையத்துக்கும் பஸ்சுக்காக அலைவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. பயணிகளின் அவதி குறித்து நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் பாராமுகமாகவே உள்ளது. வந்தவாசியை சுற்றி காஞ்சீபுரம், திருவண்ணாமலை, மேல்மருவத்தூர், மேல்மலையனூர், வேலூர் உள்ளிட்ட ஆன்மிக நகரங்களும், சென்னை, ஆரணி, செய்யாறு, சிப்காட் உள்ளிட்ட தொழில் நகரங்களும் உள்ளன.

இந்த ஊர்களுக்கு வந்தவாசி வழியாக செல்லும் பயணிகள் புதிய பஸ் நிலையத்தின் அவலநிலையால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சமூக விரோதிகள்

பொதுவாக ஒரு நகரத்தின் பெருமையை வெளியூர் பயணிகளுக்கு பறைசாற்றுவது அந்த நகரத்தில் உள்ள பஸ் நிலையம்தான். பஸ் நிலையம் செல்லும் வழியில் மின் வசதிகள் இல்லாததால் ரோட்டில் நடந்து செல்வதற்கு பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

பஸ் நிலையம் இருள் சூழ்ந்த நிலையில் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

இதையெல்லாம் தெரிந்தும் நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாதது போல உள்ளனர் என்று வந்தவாசி நகர பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

கடைகள் ஏலம்

பஸ் நிலையம் சரிவர இயங்காமல் இருப்பதற்கு காரணம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் திறக்கப்படாததால் தான். இந்த கடைகளுக்கு ஏல தொகை அதிகமாக இருப்பதால் டெண்டர் விட்டும் யாரும் கடைகளை வாடகைக்கு எடுக்க முன்வரவில்லை என்று நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

எனவே, கலைஞர் பஸ் நிலையம் மக்கள் பயன்படும் வகையில் இயங்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story