படுக்கை வசதியுடன் தயாராகும் வந்தே பாரத் ரெயில்: அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது


படுக்கை வசதியுடன் தயாராகும் வந்தே பாரத் ரெயில்: அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது
x

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்குக்கு கொண்டு வர ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

அதிவேக பயணம், சொகுசான இருக்கைகள், ஏ.சி. வசதி என பல்வேறு வசதிகள் இருப்பதால் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, நாடு முழுவதும் இருக்கை வசதிகள் கொண்ட 33 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு, சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

படுக்கை வசதி

இந்த நிலையில், படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது. இதனால், படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் மாதிரி வரைபடத்தை ரெயில்வே வடிவமைத்து வந்தது. தற்போது, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் வரைபடம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்த படத்தை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஐ.சி.எப்.பில் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணியும் கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மார்ச் மாதம்

2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் சேவையை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. தற்போது, 8 முதல் 16 வரையிலான பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் நடைமுறைக்கு வரும்போது 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள் வரையில் கூடுதலாக இணைக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 பெட்டிகளில் இருக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கவும் திட்டமிட்டு உள்ளனர். கட்டணமும் அதிகமாக இருக்கும். படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் பெட்டிகள் நல்ல அகலமான படுக்கைகள், அழகான உட்புறங்கள், விசாலமான கழிப்பறைகள், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட உள்ளது. இரவு நேரங்களில் நெடுந்தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும்.


Next Story