ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிற்க வேண்டும்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிற்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிற்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தே பாரத் ரெயில்
இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதில் சென்னை-மைசூரு இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு ரெயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மைசூருவை சென்றடைகிறது. இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இதனால் காட்பாடி, வேலூர், அரக்கோணம், ராணிபேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய அனைத்துப் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
சோதனை ஓட்டம்
தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சென்னை-மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் நிற்பதில்லை. இதனால் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி திருப்பத்தூர் பகுதி பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை வருகிற 8-ந் தேதி சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த ரெயில் சோதனை ஓட்டம் கடந்த 30-ந் தேதி நடந்தது. இந்த வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 8 மணிக்கு ஜோலார்பேட்டை கடந்து சென்றது.
நிற்க வேண்டும்
கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 4.25 மணிக்கு ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தை கடந்து சென்றது இந்த ரெயில் சென்னையில் புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோலார்பேட்டை ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை மைசூரு வந்தே பாரத் ரெயில் ஏற்கனவே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இந்நிலையில் மீண்டும் சென்னை-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.