'வந்தே பாரத்' ரெயில் நாளை முதல் இருமார்க்கத்திலும் இயங்கும்
நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் நாளை முதல் இருமார்க்கத்திலும் இயங்குகிறது.
நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயில் நாளை (புதன்கிழமை) முதல் இருமார்க்கத்திலும் இயங்குகிறது.
'வந்தே பாரத்' ரெயில்
இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 9 'வந்தே பாரத்' ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அதில் நெல்லை -சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயிலும் அடங்கும்.
நாளை முதல்...
இந்த ரெயில் நேற்று முன்தினம் தொடக்க விழா சிறப்பு ரெயிலாக மட்டும் இயக்கப்பட்டது. சென்னை எழும்பூருக்கு சென்றிருந்த ரெயில் நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40 மணி அளவில் வந்து சேர்ந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) 'வந்தே பாரத்' ரெயில் ஓடாது. நாளை (புதன்கிழமை) முதல் இருமார்க்கத்திலும் இந்த ரெயில் இயங்குகிறது.
நெல்லை சந்திப்பில் இருந்து (வண்டி எண்- 20666) காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமார்கத்தில் எழும்பூரில் இருந்து (வண்டி எண்-20665) பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லையை இரவு 10.40 மணிக்கு வந்தடைகிறது.
டிக்கெட் முன்பதிவு
இந்த ரெயிலுக்கான முன்பதிவு வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை முடிந்து விட்டது. பலர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
இது தவிர தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வருவதற்கு இப்போதே முன்பதிவு செய்து விட்டதால், இருக்கைகள் நிரம்பி விட்டன. அதேபோல் தீபாவளி, பொங்கல் விடுமுறை முடிந்து மறுநாள் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.