வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு


வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x

வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.

திருநெல்வேலி

வன்னிக்கோனேந்தலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.

வறட்சி பகுதியாக அறிவிக்க...

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

மானூர் யூனியன் வன்னிகோனேந்தல் வருவாய் குறுவட்ட விவசாயிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அதில், ''வன்னிக்கோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சுமார் 9 ஊராட்சிகள் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வரையிலும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. அப்போது இந்த ஊராட்சிகள் மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு உட்பட்டு இருந்தது. இந்த பகுதி எப்போதுமே வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது. அந்த நேரத்தில் எங்களுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் 2019-க்கு பிறகு மானூர் யூனியனுடன் எங்கள் பகுதி இணைக்கப்பட்டதால் கடுமையான வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் வறட்சி பகுதியாக எங்கள் பகுதி அறிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாக எங்களுக்கு வறட்சி நிவாரணமோ, பயிர் காப்பீட்டுத்தொகையோ வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளோம். தற்போது தமிழக அரசால் 25 வட்டாரங்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சிகளையும் வறட்சி பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணமும், பயிர் காப்பீட்டுத்தொகையும் வழங்க கேட்டு கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் 9 கிராமங்களிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

கால்நடைகளுக்கு கூடுதல் ஆம்புலன்ஸ்கள்

கீழப்பாட்டம் பொதுமக்கள், தங்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நெல்லை மாவட்டத்துக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட தலைவர் ஆபிரகாம் தலைமையில் மனு வழங்கினர்.

இதேபோன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசின் நலத்திட்ட உதவிகள் கேட்டும் பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

வழக்கமாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திரளான பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள். ஆனால் நேற்று குறைவானவர்களே வந்ததால் கலெக்டர் வளாகம் வெறிச்சோடியது.


Next Story