கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியல்- ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்தனர்


தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு


கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கிராம உதவியாளர் பணி

தமிழகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் ஆகிய 10 தாலுகாக்களிலும் மொத்தம் 107 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் 8 ஆயிரத்து 237 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 12 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில், ஈரோடு தாலுகாவில் திண்டல் வேளாளர் மெட்ரிக் மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் வி.இ.டி. கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

கலெக்டர் ஆய்வு

இதேபோல், பவானி, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, நம்பியூர், தாளவாடி ஆகிய 9 தாலுகாக்களிலும் தேர்வு நடைபெற்றது. தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்து தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேளாளர் கல்லூரியில் நடந்த தேர்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், தாசில்தார் பாலசுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பேனா, அடையாள அட்டை தவிர பை, செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தேர்வு எழுத விண்ணப்பித்ததில் 2 ஆயிரத்து 104 பேர் தேர்வு எழுத வரவில்லை. 6 ஆயிரத்து 133 பேர் ஈரோடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை எழுதினார்கள்.

சாலை மறியல்

இதற்கிடையில் கிராம உதவியாளர் தேர்வுக்கு நுழைவு சீட்டு பெற்ற தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 9.30 மணிக்குள் வர வேண்டும் எனவும், அதற்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் திண்டல் வேளாளர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 20-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத கால தாமதமாக வந்தனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்வு மையத்திற்கு முன்பு உள்ள பெருந்துறை ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஹால் டிக்கெட்டை கிழித்தனர்

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோபத்தில் அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஹால்டிக்கெட்டை கிழித்து எறிந்துவிட்டு, கண் கலங்கியபடி தேர்வு எழுத முடியாமல் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story