வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே வரதராஜபெருமாள் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
உளுந்தூர்பேட்டை,
தேர் திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வோரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நாள்தோறும் இரவு நேரங்களில் வரதராஜ பெருமாளுக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
பறக்கும் காவடி
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் வரதராஜ பெருமாள் அமர வைக்கப்பட்டார். பின்னர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி, 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து பறக்கும் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் முதுகில் செடல் குத்தி பொக்லைன் எந்திரத்தில் தொங்கியபடி, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். எலவனாசூர்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.