வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது
புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மேலும் இங்கு விநாயகர், செல்லியம்மன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், பெரியாண்டவர், பேச்சியம்மன், கருப்பு உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த யாகசாலையில் மங்கள இசையுடன் விநாயகர்பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் நாடிசந்தனம், தீபாராதனை நடைபெற்று 9.15 மணிக்கு வரதராஜபெருமாள் கோவில், 9.45 மணிக்கு பெரியாண்டவர் பேச்சியம்மன் கோவில், 10 மணிக்கு செல்லியம்மன் கோவில் விமானகலசங்களுக்கும், 10.30 மணிக்கு அனைத்து மூலஸ்தான சுவாமிகளுக்கும் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 11:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை கார்த்திகேயன் குருக்கள் நடத்தி வைக்கிறார். விழாவில் மால்வாய், சரடமங்கலம், கருடமங்கலம், தாப்பாய், சாதூர்பாகம், அலுந்தலைப்பூர்.எம்.கண்ணனூர், ஒரத்தூர் சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, சன்னாவூர், வெங்கனூர், ஆங்கியனூர், மேலரசூர், கல்லக்குடி, கல்லகம், கோக்குடி, பூண்டி மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.