வாரணாசி: பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அவா் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். மேலும், அறையின் முன்புறம் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
வெண்கலச் சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அறைக்கு மாத வாடகையாக நிகழ் நிதியாண்டுக்கு ரூ.67,500-ம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் பொதுப்பணித் துறை சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாரதியாா் வாழ்ந்த வீட்டின் அறை புனரமைக்கப்பட்டுள்ளதுடன், 2.5 அடி உயரம் உள்ள சிலையும் நிறுவப்பட்டது.
இந்த நிலையில், வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், பாரதியாா் குறித்த சிறப்பு மலரையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார்.