ரூ.3¾ கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்


ரூ.3¾ கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
x

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.3¾ கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.3¾ கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

புறநோயாளிகள் பிரிவு கட்டிடம்

ராதாபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் டயாலிசிஸ் வசதியுடன் கூடிய புற நோயாளிகள் பிரிவு கட்டிடம், ரூ.10 லட்சம் மதிப்பில் இருசக்கர வாகன கூடம், ரூ.45 லட்சத்தில் குளிர்விக்கப்பட்ட பிரேத பரிசோதனை கட்டிடம், ரூ.15 லட்சம் மதிப்பில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டப்பணி திறப்பு விழா நடந்தது. இந்த பல்வேறு திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்

அப்போது சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

ராதாபுரத்தில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், மீன் வளத்துறை அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. தமிழகத்திலேயே கிராம ஊராட்சிகளில் இத்தனை அலுவலகங்கள் இருப்பது ராதாபுரத்தில் மட்டும்தான்.

ராதாபுரம் பஸ் நிலையத்தை பல்வேறு கட்டமைப்புடன் 150 இருக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட உள்ளது. ராதாபுரம் தொகுதியில் இன்னும் 15 மாத காலத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது தண்ணீருக்காக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தார்சாலை

முன்னதாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தெற்கு கள்ளிகுளத்தில் 1.65 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியும், தேரைகுளம், ராதாபுரம் பஞ்சாயத்து தியாகராஜபுரம், செம்மண்குளம், கணபதிநகர் ஆகிய பகுதிகளில் தலா 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் வள்ளியூர் - இட்டமொழி சாலையில் முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகள், ராதாபுரத்தில் ரூ.48.35 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடம், தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.34.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடத்தையும் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

இலவச சைக்கிள்கள்

அதேபோல் சவுந்தரபாண்டியபுரம் பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து, தெற்கு கள்ளிகுளம் அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் 162 மாணவ-மாணவிகளுக்கும், ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 71 மாணவ- மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் லதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, ராதாபுரம் யூனியன் ஆணையாளர் நடராஜன், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன், இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி, ராதாபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் ஜான்சன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story