ரூ.85 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்


ரூ.85 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
x

வள்ளியூர் பகுதியில் ரூ.85 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் பகுதியில் ரூ.85 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திட்டப்பணிகள்

வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 6-வது வார்டு செட்டியார் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, 10-வது வார்டு சந்தை தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டவும், சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து மூலக்காட்டில் ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கவும், சவுந்திரபாண்டியபுரம் பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்தந்த பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

ஸ்மார்ட் வகுப்பறை

மேலும் வள்ளியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து கண்டிகைபேரி, சமூகரெங்கபுரம் பகுதிகளில் புதியதாக பகுதி நேர ரேஷன் கடைகளையும் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். பின்பு தெற்குகள்ளிகுளம், சவுந்திரபாண்டியபுரம், துரைகுடியிருப்பு, மூலக்காடு, சமூகரெங்கபுரம், சிதம்பராபுரம், இளையநயினார்குளம் உள்பட 16 பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், செயல் அலுவலர் சுஷ்மா, தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அருள்ராஜ், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருது

முன்னதாக நெல்லையில் 69-வது கூட்டுறவு வாரவிழா நடந்தது. இதில் சேரன்மாதேவியில் இயங்கி வரும் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திற்கு, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருதினை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். விழாவில் சபாநாயகரிடம் இருந்து விருதை சேரன்மாதேவி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். இச்சங்கம் 2018, 2020 மற்றும் 2022 என தொடர்ந்து மூன்று முறை சிறந்த சங்கத்திற்கான விருதினை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story