ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேகம்


ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேகம்
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வருஷாபிஷேகம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை கணக்கில் கொண்டு ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான நேற்று வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறப்பை தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடந்தது. தொடர்ந்து சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியவை நடந்தது.

பின்னர் உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை கோகுல் தந்திரி நடத்தினார். பின்னர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகமும், கிருஷ்ணசாமி, அய்யப்ப சாமி, குலசேகர பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.

லட்சதீப விழா

மேலும் சிறப்பு ஸ்ரீ பூத பலி நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை சிதறால் தொழில் அதிபர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாலையில் அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் 'லட்சதீப விழா' நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றினர். லட்ச தீப விழாவின் போது கோவில் விளக்கொளியால் ஜொலித்தது.

வருஷாபிஷேகத்தையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடு

விழாவில் சுசீந்திரம் தேவசம்போர்டு இணை ஆணையர் ரெத்தினவேல் பாண்டியன், கண்காணிப்பாளர் சிவகுமார், கோவில் மேலாளர் மோகன்குமார், ஆதிகேசவ பக்தர் சங்க அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் என்ஜினீயர் பி.பி. திலீப்குமார், ராஜகோபால், ஆற்றூர் என்.ஆர். ரதீஷ், சுகு, திருவட்டார் தளியல் முத்தாரம்மன் கோவில் அறக்கட்டளை தலைவர் பகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்திருந்தனர்.


Next Story