50 பெண் குழந்தைகளுக்கு பெட்டகம்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 50 பெண் குழந்தைகளுக்கு பெட்டகங்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 11-ந் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 50 பெண் குழந்தைகளுக்கு பெட்டகங்களை வழங்கினார். அதில் தண்டை பால்பாசி, வசம்பு, கண் மை, கருப்பு வளையல், வெள்ளை வளையல் உள்ளிட்ட பொருட்களும், குழந்தைகள் உடை-2, தொப்பியுடன் கூடிய துண்டு, சோப்பு டப்பா, சோப்பு, சங்கடை, சீப்பு, பவுடர் பப், காது சுத்தம் செய்யும் பட்ஸ், இளம் சிவப்பு நிறத்திலான உடை போன்றவை இருந்தன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பிரபா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.