தமிழகத்தில் அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு பா.ஜ.க. 2-வது இடத்துக்கு வரப்பார்க்கிறது - தொல்.திருமாவளவன்
தமிழகத்தில் அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு பா.ஜ.க. 2-வது இடத்துக்கு வரப்பார்க்கிறது என்று கள்ளிப்பட்டியில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
டி.என்.பாளையம்
தமிழகத்தில் அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு பா.ஜ.க. 2-வது இடத்துக்கு வரப்பார்க்கிறது என்று கள்ளிப்பட்டியில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
கட்சி கொடியேற்று நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு 60 அடி உயரத்தில் கொடி கம்பம் நிறுவப்பட்டு கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். கட்சியின் முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மாநில துணைச்செயலாளர் எஸ். எம்.சாதிக், மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 60 அடி கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். இதில் மாநகர செயலாளர் அம்ஜத்கான், மாவட்ட செய்தி தொடர்பாளர் பைஜூல்அகமது, மாவட்ட அமைப்பாளர்கள் ஆனந்தன் பால்ராஜ், வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொன்னரசு, ஒன்றிய செயலாளர் பிரகாஷ், மகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர்கள் மஞ்சு, சீதா, கவுரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தொல்.திருமாவளவன் கள்ளிப்பட்டியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
துயரம்
ஈழத்தில் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இன்னல் பட்டு வருகின்றனர். அதில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஐ.நா.பேரவையும், சர்வதேச சமூகமும் ஈழத்தமிழர்களின் துயரை துடைக்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீட்டையும், பாதுகாப்பையும் அளிக்க ஐ.நா.பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று மாவீரர் நாளில் வலியுறுத்துவோம்.
மகேந்திர ராஜபக்சே
மகேந்திர ராஜபக்சே உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் இன படுகொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு திட்டம் வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க. அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு வர பகிரங்கமாக முயற்சி எடுக்கிறது.
ஜனநாயகத்துக்கு எதிரானது
தமிழ்நாடு என்பது சமூகநீதிக்கான மண். இங்கு சனாதனத்துக்கு இடமில்லை. தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து கூட்டணியோடு வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இல்லை. அது தேர்தலுடன் கலைந்து சிதறிவிட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும் எதிரானது.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் தொல். திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
மேலும் தவிட்டுப்பாளையம் விவேகானந்தர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்திலும் தொல்.திருமாவளவன் எம்.பி. கொடி ஏற்றி வைத்தார்.