தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு
x
தினத்தந்தி 20 Jun 2022 9:11 AM IST (Updated: 20 Jun 2022 9:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர்.

அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு ஆலையை மூட விதித்த தடை தொடரும் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம், வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில் ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அரசு உத்தரவால் தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருக்கும் நிலையில் அதனை வாங்க விரும்புவோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





1 More update

Next Story