வேடந்தாங்கல் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு


வேடந்தாங்கல் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

வேடந்தாங்கல் ஏரி கால்வாய் தூர் வாரும் பணியை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

பறவைகள் சரணாலயம்

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் ஊராட்சியில் வலையபுத்தூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் பறவைகள் சாணாலயத்தில் உள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக வரத்து கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்கள் குறைவாக காணப்படுகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரிகளுக்கு அறிவுரை

இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, இருக்கை வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பொது மக்களுக்கு பஞ்சாயத்து மூலம் ஆங்காங்கே தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். வேடந்தாங்கலுக்கு வரும் பொதுமக்களுக்கு பஸ் நிலையம், நிழற்குடை ஏற்பாடு செய்து தரவேண்டும்.

வனத்துறை சார்பாக பறவைகள் சரணாலயம் பற்றி தெரிந்து கொள்வதற்காக நெடுஞ்சாலை ஓரங்களில் பறவைகளின் பெயர்கள் படத்துடன் கூடிய தகவல் பலகை வைக்க வேண்டும். மகளிர்குழுவினர் தாயரிக்கும் டி.சர்ட், தொப்பி போன்ற பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

சுற்றுலாத்தலமாக

பறவைகள் சரணாலயத்தை சுத்தமாக வைத்து கொள்வதற்கு ஊராட்சிகளின் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும். மேலும் நெடுஞ்சாலை துறை மூலம் பறவைகள் சரணாலயத்திற்குள் இருக்கும் காலியான இடங்களில் மரங்களை நட ஏற்பாடு செய்ய வேண்டும் வேடந்தாங்கல் ஏரியில் உள்ள 2 மதகுகளில் ஷர்ட்டர் அமைக்க வேண்டும். அதன் பிறகு தான் வயலூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வசதி கொண்டு வர முடியும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மாமல்லபுரம், முட்டுக்காடு, வண்டலூர் உயிரியல் பூங்கா மாதிரி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலத்தையும் சுற்றுலாத்தலமாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

பைனாகுலர் மூலமாக

மேல்மருவத்தூர் கோவிலுக்கு வரும் பொதுமக்களை கவரும் வண்ணம் நெடுஞ்சாலைகளில் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பொதுமக்கள் பைனாகுலர் மூலமாக பறவைகளை பார்க்க வனத்துறை ஏற்பாடு செய்து தர வேண்டும் வேடந்தாங்கல் ஏரியில் உள்ள பழைய மீன்களை அகற்றிவிட்டு புதிய மீன்களை விட மீன்வளத் துறை மூலமாக ஏற்பாடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு சார் ஆட்சியர் லட்சுமிபதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர். இந்துபாலா, வன உயிரின காப்பாளர். பிரசாந்த், வனச்சரக அலுவலர் திருரூபாஸ் லெஸ்லி மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ. தியாகராஜன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் பரத், மதுராந்தகம் தாசில்தார் ராஜேஷ், வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், பிற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story