முழு கொள்ளளவை எட்டும் வீடூர் அணை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு


முழு கொள்ளளவை எட்டும் வீடூர் அணை    அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில், அணைப்பகுதியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

திண்டிவனம் தாலுகா வீடூரில் உள்ளது வீடூர் அணை. 32 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கு, தற்போது நீர் வரத்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 30.50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 1000 கனஅடி என்கிற நிலையில் உள்ளது. இதனால் அணை விரைவில் அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் வீடூர் அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அதிகாரிகளிடம் அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு நிலவரங்கள், உபரி நீர் திறந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தூர்வாரும் பணி

தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் நலன் கருதி, விவசாயத்துக்கு தனி பட்ஜெட்டை அறிவித்தார். அதில், வீடூர் அணையை தூர்வார ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அணையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால், அணையில் ஏற்கனவே தேக்கி வைத்திருந்த தண்ணீர் அளவை காட்டிலும் தற்போது கூடுதலாக தண்ணீர் தேக்க முடியும். அதாவது, 12 சதவீதம் தண்ணீர் தேக்கும் அளவு அதிகரித்துள்ளது.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

இதன் மூலம், அணையை சார்ந்துள்ள விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். சாகுபடி பறப்பும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு நிலத்தடி நீர் அளவு அதிகரித்து, குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காண வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அணையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அணை 31 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, நிருபர்கள் வாரிசு அரசியல் குறித்து கேள்வி கேட்டனர். அப்போது அவர் எங்கள் கட்சிக்கு வாரிசு உண்டு. கட்சியின் கொள்கையை பின்பற்றி ஏற்றுக்கொண்டு எல்லோரும் எல்லா உரிமையை பெறவேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று அவர் பதிலளித்தார்.

ஆய்வின் போது, கலெக்டர் மோகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர்கள் பாபு, மோகன் ராம், திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், வக்கீ்ல் அருணகிரி, மாவட்ட தலைவர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story