தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கும் வீர அழகர்-கரையில் நின்று தரிசிக்க பக்தர்களுக்கு வேண்டுகோள்
மானாமதுரை வைகை ஆற்றில் வீர அழகர் இன்று இறங்குகிறார்.
மானாமதுரை
மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கும் வீர அழகர் இன்று இறங்குகிறார்.
தொடர் மழை
தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை சுமார் 25 நாட்கள் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் காலை, மாலை, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மானாமதுரையில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
கடைகளுக்குள் புகுந்த தண்ணீர்
இன்று காலை 7 மணி முதல் 7.25 மணிக்குள் வைகையாற்றில் வீரஅழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சிறு கடை வியாபாரிகள் மற்றும் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் வைகையாற்றில் கடைகள் போட்டும், ராட்டினங்கள் அமைத்தும் தற்காலிகமாக வியாபாரத்தை மேற்கொண்டு வந்தனர்.
தொடர் மழை காரணமாக வைகையாற்றிக்கு பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமானதால் வைகையாற்றில் போடப்பட்ட கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் மிகவும் கவலைடையந்தனர்.
இதற்கிடையே நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி தலைமையில் துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் கண்ணன் (பொறுப்பு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் ஆகியோர் வைகை ஆற்றில் வீர அழகர் இறங்குவதை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டனர். வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள் கரையில் நின்று தரிசிக்குமாறு கேட்டுக்ெகாள்ளப்பட்டது.