மானாமதுரை வைகையாற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய வீரஅழகர்


மானாமதுரை வைகையாற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய வீரஅழகர்
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரையில் வீரஅழகர் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

மானாமதுரை

சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரையில் வீரஅழகர் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக மானாமதுரையில் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளஙய்கி வருகிறது. இங்குள்ள சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் கோவில் மற்றும் வீரஅழகர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் இரவு சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வைகையாற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வீரஅழகர் எழுந்தருளினார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு வீர அழகர் கோவில் அருகே எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அழகர் அப்பன் பெருமாள் கோவிலுக்கு சென்றார்.

வைகையாற்றில் இறங்கிய அழகர்

பின்னர் அதிகாலை வீரஅழகருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு கள்ளழகர் வேடமணிந்து குதிரை வாகனத்தல் வீதி உலா வந்து ஆனந்தவல்லியம்மன் கோவில் எதிரே உள்ள வைகையாற்றில் நேற்று காலை 7.45 மணியளவில் இறங்கினார். அப்போது அங்கு அழகர் வேடமணிந்த பக்தர்கள் தண்ணீரை பீச்சியடித்து அழகரை குளிர செய்தனர். மேலும் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கரகோஷம் எழுப்பி அழகரை வணங்கினர்.

பின்னர் வைகையாற்றை கடந்து கரையோரம் அமைக்கப்பட்ட ஒவ்வொரு மண்டகபடி மண்டபத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தீபம் ஏற்றி அழகரை வழிபாடு செய்தனர்.

சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரையில் வீரஅழகர் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் (பொறுப்பு) கண்ணன், நகர் மன்ற கவுன்சிலர்கள், கவுன்சிலர் மற்றும் தி.மு.க. நகர் துணை செயலாளர் சண்முகபிரியா, யூனியன் தலைவர் லதாஅண்ணாத்துரை, ஆனந்த கிருஷ்ணன் மரக்கடை உரிமையாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், குணசீலன், அருணாட்சியம்மன் சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர்கள் நாகராஜன், ராஜேந்திரன், பாத்திமா எண்டர் பிரைசஸ் உரிமையாளர் ரபீக், அகிலா டிம்பர் டிரேடர்ஸ் உரிமையாளர்கள் சுரேஷ் அண்ணாமலை, பி.ஜி. சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர் துபாய்காந்தி குடும்பத்தினர், மல்லல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மூர்த்தி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அழகரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மானாமதுரை நகர் முழுவதும் அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.


Next Story