வீரகனூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
வீரகனூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தலைவாசல்:
தேரோட்டம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 7 மணிக்கு பக்தர்கள் கோவிலை சுற்றி உருளுதண்டம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மதியம் 12 மணி அளவில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் அமர வைத்தனர். நேற்று மாலை 3 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. மேளதாளம், வாணவேடிக்கையுடன் ேதரோட்டம் நடந்து முடிந்தது.
திரளான பக்தர்கள்
தேரோட்டத்தில் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், நல்லதம்பி எம்.எல்.ஏ., தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, வீரகனூர் பேரூராட்சி துணைத் தலைவர் அழகுவேல், வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வீரகனூர், வி.ராமநாதபுரம், லத்துவாடி, திட்டச்சேரி, கிழக்கு ராஜபாளையம், இலுப்பநத்தம், புனல்வாசல், தெடாவூர், பூலாம்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.