வீரகோதண்டராமர் கோவில் குளம் சுத்தம் செய்யப்பட்டது


வீரகோதண்டராமர் கோவில் குளம் சுத்தம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோவில் குளம் சுத்தம் செய்யப்பட்டது

திருவாரூர்

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகத்தில் வீர கோதண்டராமர் கோவில் உள்ளது. மேலும் இக்கோவிலுக்கு சொந்தமாக புனித நீராடும் குளம் உள்ளது. ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் பக்தர்கள் கோடியக்கரை சென்று கடலில் புனித நீராடி விட்டு இந்த குளத்திலும் வந்து நீராடி செல்வார்கள். மேலும் கடலுக்கு சென்று புனித நீராட முடியாதவர்கள் இந்த குளத்தில் புனித நீராடி செல்வார்கள். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் பராமரிப்பின்றி கரையை சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்தும், குளத்தில் ஆகாயத்தாமரை செடிகளும் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. இதனால் குளத்தில் உள்ள தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்தது. எனவே பக்தர்களின் நலன் கருதி பராமரிப்பின்றி காணப்படும் இந்த கோவில் குளத்தை சுத்தம் செய்து தர கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து வீர கோதண்டராமர் கோவில் மண்டக படித்தார்கள் ஒன்றிணைந்து சுத்தம் செய்து குளத்தை பராமரிப்பது என முடிவு செய்து, குளத்தை சுற்றியுள்ள கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அழித்து சுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று குளத்தை சுத்தம் செய்த கோவில் நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அந்த குளத்தை தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story