வீராணம் ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்கள் கருத்து


வீராணம் ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 8 Jun 2023 6:45 PM GMT (Updated: 8 Jun 2023 6:46 PM GMT)

வீராணம் ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரி. வீரநாராயணபுரம் ஏரி என்று அழைக்கப்பட்ட இந்த ஏரி நாளடைவில் மருவி வீராணம் ஏரியாக மாறி விட்டது. இந்த ஏரி லால்பேட்டையில் அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி. 1461 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இதனால் இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. இருப்பினும் ஏரியை முழுமையாக தூர்வாராததால் அடியின் மட்டத்தில் சற்று வேறுபாடுகள் இருக்கிறது.

வீரநாராயணன் ஏரி

உலகிலேயே மனிதர்களால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியாக இந்த வீராணம் ஏரி விளங்கி வருகிறது. சாதாரணமாக செய்யப்பட்ட சிறிய கருவிகளை கொண்டு இந்த ஏரியை வெட்டி உள்ளார்கள். கி.மு. 907-955-ல் முதலாம் சோழர்கள் காலத்தில் 10-ம் நூற்றாண்டில் இந்த ஏரி கட்டப்பட்டது. ராஜாதித்ய சோழனால் உருவாக்கப்பட்டது. ராஜாதித்ய சோழனின் தந்தை முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாராயணன். இந்த பெயரை வைத்தே வீரநாராயணன் ஏரி என்று சூட்டப்பட்டது.

இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக வருகிறது. இது தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.

வீராணம் திட்டம்

இருப்பினும் பிரதான தண்ணீர் வடவாறு வழியாகவே வருகிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. கோடை காலத்தில் பெரும்பாலும் இந்த ஏரியில் தண்ணீர் இருக்காது. ஆனால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. தற்போது 41 அடி வரை தண்ணீர் உள்ளது.

அதாவது, சென்னை மாநகர மக்களின் தாகத்தை தணிப்பதற்காக கடந்த 1967-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது, வீராணம் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கருணாநிதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் 2004-ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்து முழுமையாக செயல்படுத்தினார். ஏரி வறண்டு போகும் போது, தண்ணீர் கொண்டு செல்ல முடியாததால், ஏரிக்குள் 45 அடி ஆழ்துளை கிணறு தோண்டி எடுக்கப்பட்டு, நீரை குழாய் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஏரியில் 34 மதகுகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஏரிக்கு சோழ இளவரசி குந்தவை வசந்த காலத்தில் வந்து புத்துணர்ச்சி பெற்று சென்றதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இந்த வீராணம் ஏரிக்கரையின் அம்சங்களை விளக்குகிறது.

வெளிநாட்டு பறவைகள்

இங்கு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வெளி நாட்டு பறவைகள் முகாமிட்டு வருகிறது. இதன் மூலம் இயற்கையாகவே பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. இந்த பறவைகளை கரையில் இருந்து நம்மால் ரசிக்க முடியும். இதை படகு மூலம் சென்று ரசிக்கும் அளவுக்கு இதை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இந்த ஏரியின் வரலாறு, வரலாற்று நினைவு சின்னங்கள், சுற்றுலா துறை தொடர்பான புகைப்பட கண்காட்சிகள் வைத்து சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சுற்றுலா துறை முயற்சி எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் அந்த கோரிக்கை இது வரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இது பற்றி அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

சுற்றுலா தலமாக்க வேண்டும்

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த இளங்கீரன்:- தமிழகத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று வீராணம் ஏரி. இந்த ஏரியை முழுமையாக தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். சென்னை மக்களின் குடிநீர் தேவையையும், வீராணம் ஏரியை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஏரியை சுற்றுலா தலமாக்க அரசு முன்வர வேண்டும்.

ஏரி நடுவே தீவு போன்று உருவாக்கி, கேரளா மாநிலம் தேக்கடியில் உள்ளது போல போட் ஹவுஸ் அமைக்க வேண்டும். 14 கிலோ மீட்டர் நீளமும், 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட ஏரியை சுற்றி வந்தால் ஒரு நாள் முழுவதும் ஆகும். இது போன்று ஒரு திட்டத்தை வீராணம் ஏரியில் செயல்படுத்தினால் இந்த பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும். இதற்கு அரசும், சுற்றுலா துறையும் முயற்சி எடுக்க வேண்டும்.

படகு சவாரி

கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ரவீந்திரன்:- 1,000 ஆண்டுகள் பழமையும், பெருமையும், சிறப்பும் வாய்ந்த வீராணம் ஏரி சோழர் காலத்து ஆட்சி முறையையும், நீர் மேலாண்மையையும், பறைசாற்றி வரக்கூடிய அடையாளமாக திகழ்கிறது. காவிரி பாசன பகுதியின் அடையாளமாக திகழும் இந்த ஏரியின் மூலம் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை 3-ல் 2 பங்கு பூர்த்தி செய்கிறது. கடந்த காலங்களில் ஒரு போக சாகுபடி காலமான 5 மாதங்களுக்கு மட்டும் நீர்ப்பிடிப்பு பகுதியாக இருந்த ஏரி, தற்போது, சென்னை மாநகர மக்களின் குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதால், ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் இருப்பு வைக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு பறவைகள், பறந்து வந்து ஏரியில் 4 மாதங்கள் தஞ்சமடைந்து, பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது.

சோழர் காலத்து ஏரியாக விளங்கும் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீரை தேக்கி கடல் போல் காட்சி அளிக்கும் ஏரியை மேம்படுத்தி, சுற்றுலா தலமாக அறிவித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். படகு சவாரி, உணவகங்கள், வரலாற்று நினைவு சின்னங்கள், ஏரி வெட்டியதற்கான அடையாளங்கள் உருவாக்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி கோடை காலத்திலும் தண்ணீர் தேங்கி இருப்பதால், கடல் நீர் உட்புகுவதை தடுக்க கூடிய பாதுகாப்பு அரணாகவும் நிலத்தடி நீரை பாதுகாக்கவும் செய்கிறது.

வாழ்வாதாரம் உயரும்

ஸ்ரீமுஷ்ணம் பேரூரை சேர்ந்த குஞ்சிதபாதம்:- வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. ஆகவே இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும். அப்போது தான், ஏரிக்கு தண்ணீர் தங்கு தடையின்றி வரும். இந்த ஏரியை சுற்றுலா தலமாக்கினால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும்.நேரடியாகவும், மறைமுகமாகவும் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஏரிக்கு வருவார்கள். அதற்கேற்ப அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மா.உத்தமசோழகன் குணச்செல்வம்:- பிச்சாவரம் சுற்றுலா மையம் போல், வீராணம் ஏரியையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். இப்பகுதியில் பிரதானமாக விவசாயம் இருந்து வருகிறது. ஏரியை சுற்றுலா தலமாக மாற்றினால், விவசாயத்திற்கு மாற்று தொழிலாக சிறு, சிறு தொழில்கள் வளர்ச்சி அடையும். இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைவார்கள். இதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்புளியங்குடி விவசாயி செல்வராஜ்:- வீராணம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும். தண்ணீர் ஆண்டுதோறும் வற்றாத வகையில் தேக்கி வைக்க வேண்டும். அப்போது தான் சுற்றுலா தலமாக்கினால், படகு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளும் ஏற்றதாக இருக்கும். கரைகளை சுற்றிலும் மாங்குரோவ் காடுகளை வளர்த்தால் மேலும் பயன் உள்ளதாக இருக்கும். சிறுவர்கள் விளையாட பூங்கா, உணவகங்கள், குடில்கள் அமைத்தால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story