விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்வுதக்காளி ரூ.120, பீன்ஸ் ரூ.90-க்கும் விற்பனையானது


விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்வுதக்காளி ரூ.120, பீன்ஸ் ரூ.90-க்கும் விற்பனையானது
x
தினத்தந்தி 2 July 2023 6:45 PM GMT (Updated: 2 July 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறிகள் விலை உயர்ந்த நிலையில், தக்காளி கிலோ ரூ.120-க்கும், பீன்ஸ் ரூ.90-க்கும் விற்பனையானது.

விழுப்புரம்

கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் காய்கறி விலை அதலபாதாளத்தில் சரிந்து, இருந்த நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக, வரத்து குறைந்து காய்கறிகளின் விலை உயர தொடங்கி உள்ளது. இதில் தக்காளியின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அந்த வகையில் விழுப்புரத்தில் நேற்று தக்காளியுடன் பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

விழுப்புரத்தில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனையான நிலையில, அருகே உள்ள காணையில் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று கிலோ ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் ரூ.90-க்கும், ரூ.40-க்கு விற்பனையான கேரட் ரூ.60, ரூ.30-க்கு விற்பனையான பீட்ரூட் ரூ.40, ரூ.140-க்கு விற்பனையான ஒரு கிலோ இஞ்சி ரூ.200 என்கிற நிலையில் விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

கள்ளக்குறிச்சி

அதேபோல் கள்ளக்குறிச்சியில் உள்ள காய்கறி கடைகளிலும் நேற்று காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தக்காளி ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது தவிர கிலோ அளவில் இஞ்சி ரூ.250-க்கும், சின்னவெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகியவை தலா ரூ.100-க்கும், கேரட் ரூ.80-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது, ஒட்டுமொத்தகாய்கறிகளின் விலையும் ஏற்றம் கண்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story