காய்கறி வரத்து 50 சதவீதம் குறைந்தது
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து 50 சதவீதம் குறைந்தது. விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து 50 சதவீதம் குறைந்தது. விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வரத்து குறைந்தது
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டிற்கு ஆனைமலை, கோமங்கலம், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இது தவிர தேனி, திண்டுக்கல், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு வெளியிடங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளாவுக்கும், உள்ளூர் தேவைக்கும் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் காய்கறி உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால் பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து சரிந்தது. இதன் காரணமாக விலை உயர்ந்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தக்காளி
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு தினமும் 80 டன் வரை காய்கறிகள் வரும். அதில் கேரளாவுக்கு 70 சதவீதம் வரை அனுப்பி வைக்கப்படும். இது தவிர உள்ளூர் சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
தற்போது போதிய மழை பெய்யாததால் காய்கறி உற்பத்தி குறைந்தது. இதனால் காய்கறிகள் விலை கடந்த மாதத்தை விட 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்து விட்டது. குறிப்பாக தக்காளி 15 கிலோ பெட்டி ரூ.400 வரை விற்பனையானது. மேலும் காய்கறி வரத்தும் 50 சதவீதம் குறைந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விலை விவரம்
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் மொத்த விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
கத்தரிக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.30, கேரட் ரூ.40, பீட்ரூட் ரூ.30, பீர்க்கன்காய் ரூ.45, பீன்ஸ் ரூ.100, வெண்டைக்காய் ரூ.30, அரசாணிக்காய் ரூ.10, பூசணிக்காய் ரூ.10-க்கு விற்பனையானது.