குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்
குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்
உடுமலை
உடுமலை நகராட்சி வாரச்சந்தையில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி வாரச்சந்தை
உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நாட்களில் கூடும் சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் தினசரி காய்கறி சந்தையும், அதையடுத்து காய்கறி கமிஷன் மண்டிகளும் உள்ளன. இங்கு சேகரமாகும் காய்கறி கழிவுகள் வாரச்சந்தை வளாகத்தின் தெற்கு பகுதியில் நீண்ட தூரத்திற்கு கொட்டப்பட்டு கிடக்கின்றன.அத்துடன் அந்த பகுதியில் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. கமிஷன் மண்டிகளுக்கு வரும் சரக்கு வாகனங்கள், இட நெருக்கடி காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில்தான் நிறுத்திவைக்கப்படுகிறது.
அந்த இடத்திற்கு அருகில் காய்கறி மொத்த விற்பனை கடைகளும் உள்ளன. வாரச்சந்தை நாட்களில் அந்த இடத்திற்கு அருகில் திறந்த வெளியில்காய்கறி கடைகள் வைக்கப் படுகின்றன.
நோய் பரவும் அபாயம்
இந்த நிலையில் அந்த பகுதியில் காய்கறி கழிவுகள் குவிந்தும், கழிவுநீர் தேங்கியும் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.அத்துடன் நோய்பரவும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு வெளிப்பகுதியில் சுற்றுச்சுவரை அடுத்துள்ள தனியார் இடங்களில் ஏறாளமான கடைகள், நிறுவனங்கள் உள்ளன.வாரச்சந்தை வளாகத்தில் இருந்து வரும் துர்நாற்றம், அந்த கடைகள், நிறுவனங்கள் உள்ள பகுதிவரை வீசுகிறது. அதனால் வாரச்சந்தை வளாகத்தில் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.