பாமாயில் மர சாகுபடி குறித்த வாகன பிரசாரம்


பாமாயில் மர சாகுபடி குறித்த வாகன பிரசாரம்
x

விழுப்புரத்தில் பாமாயில் மர சாகுபடி குறித்த வாகன பிரசாரம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பாமாயில் மர சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் நேற்று காலை நடைபெற்றது. இந்த பிரசார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கொடியசைத்து தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தார். இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தேசிய சமையல் எண்ணெய் பனை உற்பத்தி திட்டத்தின் கீழ் பாமாயில் பயிரிடவும், அதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையும் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ளது. பாமாயில் பழக்குலைகளுக்கு இந்த ஆண்டுக்கு மத்திய, மாநில அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.13,346 நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்துக்காக தமிழக அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் முழு மானியத்தில் பாமாயில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு பராமரிப்பு மானியமும், 3 ஆண்டுகளுக்கு ஊடுபயிர் மானியமும், சொட்டுநீர் பாசன கருவிகளும், அறுவடை கருவிகளும் மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே பாமாயில் மர சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டுமென தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story