கோத்தகிரி பகுதியில் வாகன சோதனை:பஸ், லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் அகற்றம்-அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை
கோத்தகிரியில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
வாகன சோதனை
கோத்தகிரி பகுதியில் இயக்கப்படும் லாரிகள், மினி பஸ்களில் பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார், கோத்தகிரி பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
5 பேருக்கு அபராதம்
அப்போது அந்த வழியாக வந்த 4 மினி பஸ்களில் பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் அகற்றினர். இதே போல அவ்வழியாக வந்த லாரி ஒன்றிலும் இருந்த காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டது. மேலும் அவர்கள் 5 பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களில், 2-வது முறை காற்று ஒலிப்பான் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.