பெத்தநாயக்கன்பாளையத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ; கொத்தனார் பலி


பெத்தநாயக்கன்பாளையத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ; கொத்தனார் பலி
x
தினத்தந்தி 3 July 2023 7:40 PM GMT (Updated: 4 July 2023 9:58 AM GMT)

பெத்தநாயக்கன்பாளையத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து; கொத்தனார் பலி

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்,

பெத்தநாயக்கன்பாளையத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அடுத்தடுத்து வாகனங்கள் மோதின

சேலத்தில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று காலையில் சென்றது. இந்த பஸ்சை ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் ஓட்டிச்சென்றார். இந்த பஸ் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் சென்றது.

அப்போது முன்னால் சென்ற கார் திடீரென பெத்தநாயக்கன்பாளையம் இணைப்பு சாலையான சர்வீஸ் ரோட்டில் திரும்ப முற்பட்டது. இதனால் பின்னால் வந்த சொகுசு பஸ்சை உடனடியாக டிரைவர் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அந்த பஸ் முன்னால் சென்ற காரின் மீது மோதியது.

கொத்தனார் பலி

இதில் அந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் (சென்டர் மீடியன்) மோதியதுடன், அந்த வழியாக முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவர்கல்பட்டியை சேர்ந்த கொத்தனார் பொன்னுசாமி (வயது 56) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்த 2 பேரும் உடனடியாக பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதே நேரத்தில் கார் மற்றும் பஸ்சில் பயணம் ெசய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி தப்பினர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதையொட்டி அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்தில் இறந்த பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசங்கரி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச்செழியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story