தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
சேவூர்
சேவூரில் கோபி சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதில் 450 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் தினசரி பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கள் வாகனங்களை பள்ளியின் முன்பு நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் ரோட்டிலேயே அங்கும், இங்குமாக நிறுத்துகிறார்கள்.
இச்சாலையானது கோபி செல்லும் பிரதான சாலை ஆகும். இதனால் அச்சாலை வழியாக பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்பள்ளி கோபி செல்லும் சாலையோரம் இருப்பதால், இப்பகுதியில் பெற்றோர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படும் என்ற அச்சத்திலேயே பள்ளி குழந்தைகள் சென்று வருகின்றனர்.
எனவே பள்ளிக்கு இருபுறமும் உள்ள இடத்தை சுத்தம் செய்து வாகனங்களை நிறுத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.