வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா நிறைவு
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி மாதா பேராலயம்
மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்குகிறது நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு விழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கணி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகளும், ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட வழிபாடு நிகழ்ச்சிகளும் நடந்தது.
நிறைவு விழா
விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. 10 நாட்கள் நடந்த விழாவின் நிறைவு நாளான நேற்று மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாதாவின் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறக்கப்பட்ட கொடியை பேராலயத்திற்கு எடுத்து செல்லும்போது அதை பக்தர்கள் தொட்டு வணங்கினர். தொடர்ந்து கீழ் கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகியவை நடந்தது.
விழாவையொட்டி நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவிஇயக்குனர் கனகராஜ், நாகை சுகாதார பணிகள் உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொதுசுகாதாரம், பேரூராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.