பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக திகழும் வெள்ளலூர் குளம்
பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக வெள்ளலூர் குளம் திகழ்கிறது. அங்கு பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டப்படுகிறது.
வெள்ளலூர்
பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக வெள்ளலூர் குளம் திகழ்கிறது. அங்கு பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டப்படுகிறது.
வெள்ளலூர் குளம்
கோவை அருகே வெள்ளலூரில் 90 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குளம் அமைந்து உள்ளது. இங்கு சீமை கருவேல மரங்களும், குப்பை கழிவுகளும் நிறைந்து காணப்பட்டது.
இதனால் கடந்த 15 ஆண்டாக குளத்துக்கு தண்ணீர் வராமல் இருந்தது. இதையடுத்து தன்னார்வலர்கள் முயற்சியால் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
இந்த குளக்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு மியாவாக்கி முறை யில் அடர்வனம் அமைக்கப்பட்டது. அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகை செடிகள், பட்டாம்பூச்சிகளை கவரும் பல்வேறு செடிகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டது.
பட்டாம்பூச்சி பூங்கா
இதன் காரணமாக வெள்ளலூர் குளம் பல்லுயிர் பூங்காவாக திகழ்கிறது. பட்டாம்பூச்சிகளின் வருகையும் அதிகரித்தது. அங்கு தற்போது 101 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்த பட்டாம்பூச்சி வகைகளில் 25 சதவீதம் வெள்ளலூர் குளத்தில் காணப்படுகிறது. இதனால் வெள் ளலூர் குளம் பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக (ஹாட்ஸ்பாட்) திகழ்கிறது. எனவே அங்கு பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது:-
மகரந்த சேர்க்கை
தமிழகத்தில் இதுவரை 328 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்ப தாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் வெள்ளலூர் குளத்தில் மட்டும் 101 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் தான் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் பங்கு வகிக்கிறது.
இந்த குளத்தில் வெள்ளையன்கள், புல்வெளியான்கள், நுனி சிறகன்கள், வரியன்கள், நீலன்கள், துள்ளிகள், ஜோக்கர், காமன் காஸ்டர், சில்வர் லைன், ஆப்ரிக்கன் மார்பிள்ட் ஸ்கிப்பர் உள்ளிட்ட 101 வகைகள் இருக்கிறது.
பூங்கா அமைக்க அடிக்கல்
அதிக பட்டாம்பூச்சி இனங்களை கவரும் வகையில் வெள்ளலூர் குளத்தில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டப்படுகிறது.
இதில் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள். வெள்ளலூர் குளக்கரையில் 300 அடி நீளத்துக்கு இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.
அதில் பட்டாம்பூச்சிகள் விரும்பி உண்ணும் செடிகள், மூலிகை செடி உள்பட பலவகையான செடிகளும் நடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.