வெள்ளியங்கிரி மலைேயற பக்தர்களுக்கு தடை
தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பூண்டி
தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளியங்கிரி மலை
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்கிருந்து 6 மலைகளை தாண்டி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதியான வெள்ளியங்கிரி மலையில் மழை காலத்தில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு தடை
இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவிலில் இருந்து மலை மீது ஏறிச் செல்ல தொடங்கும் இடத்தில் உள்ள கேட் மூடப்பட்டது. அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை வனத்துறை உயர் அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி பக்தர்கள் மலை ஏறி செல்வதை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வனவிலங்குகள் நடமாட்டம்
வெள்ளியங்கிரி மலையில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். தற்போது மலையேற தடை விதிக்கப் பட்டு உள்ளது. மலை மீது பக்தர்கள் வீசிச்சென்ற பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெள்ளியங்கிரி மலையில் சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறிவிடும். திடீரென்று மழை, சூறாவளி காற்று வீசும். வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். அது நேரத்தில் பக்தர்கள் சென்றால் போதிய பாதுகாப்பு இருக்காது.
கடும் நடவடிக்கை
எனவே தான் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. அதை மீறி பக்தர்கள் யாரும் மலையேறி செல்ல வேண்டாம். அதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மலையேறும் பக்தர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.