வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்
வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், ஊராட்சிக் குழு தலைவர் பாபு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சி செயலாளர் சாந்தி, சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
குடியாத்தம் ஒன்றியம் டி.பி.பாளையம் ஊராட்சி ரங்கசமுத்திரம் ராமகிருஷ்ணா பள்ளி தெருவில் ரூ.5 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க அனுமதி வழங்குவது, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் ஊனை வாணியம்பாடி பைரவர் கோவில் அருகில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் அமைக்க ரூ.3 லட்சத்தில் பணிகள் தொடங்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி குழு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அறை நுழைவாயில் ஆகியவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கியும், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகத்திற்கு ரூ.7 லட்சத்தில் கழிவறை அமைக்கவும் அனுமதி வழங்குவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.