வேலூர்: வகுப்பறைகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட வேண்டும் -கலெக்டர் உத்தரவு


வேலூர்: வகுப்பறைகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட வேண்டும் -கலெக்டர் உத்தரவு
x

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வகுப்பறைகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்,

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

ஆய்வின் போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது,

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்து பள்ளிகளில் சுண்ணாம்பு தீட்டி சுத்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் தொரப்பாடி அரசு பள்ளியில் எந்தவிதமான முன் ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களாக அக்கறையுடன் முன்வந்து பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை கேட்டுப் பெற வேண்டும்.அது அவர்களுடைய கடமை.

தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பள்ளி வளாகத்தை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும். மோசமான சுவர்களளுக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும்.

இன்னும் இரண்டு வாரங்களில் நான் வந்து இங்கு ஆய்வு செய்வேன். அப்போது பணிகள் மேற்கொள்ளவில்லை என்றால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தரவேண்டும். மாணவர்கள் ஒழுக்கம் தவறும் பட்சத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் சரிவர பாடப்படுவது இல்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் 'பாட வேண்டும் என்றார்.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story