வேங்கைவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வேங்கைவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 28 Oct 2023 12:15 AM IST (Updated: 28 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேங்கைவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

மாரியம்மன் கோவில்

தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் புதிதாக கோபுரம் கட்டி, புனரமைப்பு பணி செய்வது மற்றும் அருகில் உள்ள விநாயகர், முருகன், பெருமாள் ஆகிய கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது என அக்கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி மாரியம்மன் கோவிலில் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, மேற்கண்ட கோவில்களில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து நேற்று காலை மாரியம்மன், விநாயகர், முருகன், பெருமாள் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

முன்னதாக நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை பிம்பசுத்தி, ரக்ஸாபந்தனம், நாடி சந்தானம் ஆகிய பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்தவுடன் யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதன்பிறகு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட புனித நீர் விநாயகர், முருகன், பெருமாள், மாரியம்மன் ஆகிய கோவில்களின் கோபுர கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் வேங்கைவாடி, குடியநல்லூர், தியாகை, கொங்கராயப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story