வேங்கைவயல் விவகாரம்: வரும் 6-ம் தேதி ஒரு நபர் ஆணையம் நேரடி விசாரணை


வேங்கைவயல் விவகாரம்: வரும் 6-ம் தேதி ஒரு நபர் ஆணையம் நேரடி விசாரணை
x
தினத்தந்தி 3 May 2023 4:04 AM GMT (Updated: 3 May 2023 4:12 AM GMT)

குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவம் தொடர்பாக வேங்கைவயலில் வரும் 6-ம் தேதி ஒரு நபர் ஆணையம் நேரடி விசாரணை நடத்துகிறது..

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், அறிவியல் ரீதியாக தடயங்கள் சேகரிப்போடு, அதற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது விசாரணையை ஓரிரு நாளில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவம் தொடர்பாக வேங்கைவயல் கிராமத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வரும் 6-ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்துகிறது. முதலில் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேங்கைவயல் சென்று நீதிபதி சத்யநாராயணன் விசாரணை நடத்துகிறார். வழக்கில் விசாரணையின்போது கிடைத்த தகவல்களில், சந்தேகங்களை தீர்க்கவும் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டி உள்ளதால் இந்த விசாரணை நடைபெறுகிறது.

வேங்கைவயல் வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில், போலீசார் வேங்கைவயலில் நேற்று நேரடி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story