ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு நேரடியாக சம்பளம்
ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் நேடியாக ஊதியம் வழங்க தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணைய தலைவர் கூறினார்.
திருப்பூர்
ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் நேடியாக ஊதியம் வழங்க தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.
தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர்
தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தூய்மைப்பணியாளர்களுக்கான நலவாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தாட்கோ மேலாளர் ரஞ்சித்குமார், ஆதிதிராவிடர் நல அதிகாரி புஷ்பாதேவி, பேரூராட்சி செயல் அதிகாரிகள், தூய்மைப்பணியாளர்கள், வெளிமுகமை நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டர்.
கூலி குறைப்பு
ஆய்வு குறித்து தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
. நகராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு கலெக்டர் நிர்ணயம் செய்த கூலியை விட ரூ.10, ரூ.20 குறைவாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஊதியத்தை கலெக்டர் நிர்ணயித்தால் அந்த ஊதியத்தை விட அதிகமாகத்தான் இருக்க வேண்டும். குறைக்கக்கூடாது. ஒப்பந்தத்தில் மாற்றி கூலி வழங்க கலெக்டர் உத்தரவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. எண்களை அவர்களின் அடையாள அட்டையில் குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்சூரன்சு அனைவருக்கும் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
நேரடியாக சம்பளம்
தூய்மைப்பணியாளர்களுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளது. 11 மாநிலங்களில் இதுபோன்ற ஆணையம் மாநில அளவில் உள்ளது. தமிழகத்தில் இல்லை. மாநில அளவில் ஆணையம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம். தூய்மைப்பணியாளர்களுக்கு தேசிய அளவில் நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் உள்ளது. இதன்மூலம் பல்வேறு வங்கிக்கடன் கொடுக்கிறார்கள்.
தூய்மைப்பணியாளர்களின் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம். ஒப்பந்த முறையில் விடப்படுவதால் தான் தூய்மைப்பணியாளர்களுக்கு சம்பளம் சரிவர சென்று சேராமல் உள்ளது. அனைவரையும் நிரந்தரப்படுத்த முடியாது என மாநில அரசு நினைத்தால் கர்நாடகா, ஆந்திராவில் செயல்படுத்துவதை போல் டி.பி.எஸ். என்ற முறையில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு நேரடியாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சம்பளத்தை வழங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.