ஆத்தூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்:அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டரை தாக்கி பணம் கொள்ளை
ஆத்தூர் அருகே பட்டப்பகலில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மூன்று பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அரசு பஸ்
தூத்துக்குடி மாவட்டம் திருச்ெசந்தூரில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் ஒன்று நேற்று பகல் 11.30 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் பட்டுராஜா ஓட்டினார். தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்த ராமசாமி கண்டக்டராக இருந்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஆத்தூர் அடுத்த பழையகாயல் பஸ் நிறுத்தத்தை கடந்து சாலையில் இருந்த வேகத்தடை பகுதியில் பஸ் சற்று மெதுவாக சென்று கொண்டிருந்தது.
பணம் கொள்ளை
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பஸ்சை முந்திச் சென்று வழிமறித்து, சாலையின் குறுக்கே தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். 3 பேரும் திடீரென்று பஸ்சுக்குள் ஏறி, கண்டக்டர் ராமசாமி, டிரைவர் பட்டுராஜா ஆகியோரை தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.
மேலும் ராமசாமியிடம் பையில் வைத்திருந்த பணம், டிக்கெட்டுகளையும் கொள்ளையடித்து விட்டு, தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். மொத்தம் ரூ.11 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டரை தாக்கி பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.