ஈரோட்டில் துணிகரம் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.7 லட்சம் திருட்டு
ஈரோட்டில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோட்டில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வியாபாரி
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 38). செல்போன் உதிரிபாகங்களை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி பிருந்தா (36). கடந்த 9-ந் தேதி பரமேஸ்வரன் வியாபாரத்துக்காக மராட்டிய மாநிலம் புனேவுக்கு சென்றார். பிருந்தா நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு உறவினர் வீட்டில் தங்கினார்.
இந்தநிலையில் புனேவில் இருந்து பரமேஸ்வரன் நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டுக்குள் இருந்து 3 பீரோக்களும் திறக்கப்பட்டு, அதில் பொருட்கள் சிதறி கிடந்தன.
20 பவுன் நகை
பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணத்தை பரமேஸ்வரன் பார்த்தார். அப்போது அதில் இருந்த 20 பவுன் நகையும், ரூ.7 லட்சமும் திருட்டுபோனது தெரியவந்தது. மேலும், வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு, மர்ம நபர்களின் முகம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.