தேனியில் துணிகரம்: தொழில் அதிபர் வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை


தேனியில் துணிகரம்:  தொழில் அதிபர் வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை:  மர்ம நபர்கள் கைவரிசை
x

தேனியில் தொழில் அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

தேனி

தொழில் அதிபர்

தேனி பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 75). இவர் தேனியில் மஞ்சள் தூள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை வைத்துள்ளார். நேற்று இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்று விட்டார்.

இன்று அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் தொழிலாளி உமா என்பவர் அங்கு வந்தார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் ராஜாராமிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்ததும் ராஜாராம் தூத்துக்குடியில் இருந்து பதறியடித்து கொண்டு தேனிக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது.

60 பவுன் கொள்ளை

பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் அங்கு அழைத்து வரப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி தெருவில் சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வீட்டை பூட்டிச் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story