கோபியில் துணிகரம்; 2 வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோபியில் துணிகரம்; 2 வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

கோபியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு

கடத்தூர்

கோபியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சுற்றுலா சென்றார்

கோபி வேலுமணி நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்தாணி அருகே கொண்டையம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சோமசுந்தரம் வேலைக்கு சென்று விட்டார்.

இவர்களது வீட்டின் கீழே உள்ள வீட்டில் பிரபு (38) என்பவர் குடியிருந்து வருகிறார். கார் டிரைவரான இவரும் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டார்.

நகையை காணவில்லை

இந்த நிலையில் நேற்று மதியம் தனலட்சுமி வீட்டுக்கு வந்தார். அப்போது பிரபுவின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோவும் திறந்திருந்தது. அதிலிருந்த 5 பவுன் நகையை காணவில்லை.

அதைத்தொடர்ந்து அவர் மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கும் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த 18 பவுன் நகையை காணவில்லை.

ெகாள்ளை

இதுகுறித்து தனலட்சுமி கோபி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 2 வீடுகளும் பூட்டி கிடப்பதை அறிந்த மர்மநபர்கள் சம்பவத்தன்று நைசாக அங்கு சென்றுள்ளனர். பின்னர் முதலில் கீழே உள்ள பிரபுவின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதன்பின்னர் படுக்கையறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து மாடிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள தனலட்சுமியின் வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 18 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பித்து சென்றனர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ேகாபி போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story